×

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா, கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டி வருவதாக கூறி அவர்கள் தாக்கி விரட்டியடிப்பதும், சில நேரங்களில் சிறைபிடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஓராண்டில் தமிழக மீனவர்கள் 40க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை 400க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்ற 1000க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள், தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது 10க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடி வலைகள், உபகரணங்களை சேதப்படுத்தி மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் மீனவர்கள் வெறும் கையுடன் கரைக்கு திரும்பியுள்ளனர். உலக மீனவர் தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 29ம் தேதி இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் மீனவர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பும் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : fishermen ,Sri Lankan ,Kachchativu ,navy , Kachchativu, Tamil Nadu Fishermen, Sri Lanka Navy
× RELATED திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி